Friday, November 14, 2008

ParamaRagasiyam

பாடம் 001: மாணவர்களின் தகுதி பாடல் 001 (I.1.1)

'பரமன் என்று ஒருவன் இருக்கிறான்' - இதுதான் பரமரகசியம். ஒரு மர்ம நாவல் 'இவன்தான் கொலையாளி' என்ற வாக்கியத்தோடு முடிவடைவதில்லை. மர்மம் அப்பொழுதுதான் உச்சகட்டத்தை அடைகிறது. அது போல, வாழ்க்கை முழுவதும் இன்பம் எங்கே, இன்பம் எங்கே என்று தேடியோடிய பிறகு வேதம் என்ன சொல்கிறது என்று பார்க்க வரும் மனிதனுக்கு, இந்த வாக்கியம்தான் ஒரு நீண்ட பயணத்தின் முதல் படி.

வேதங்கள் பரமனை முழுவதுமாக உணர்ந்து கொள்ளும் வழி வகைகளை தெளிவாக தருகின்றன. ஆனால், அவற்றை புரிந்து கொண்டு, கடைபிடித்து பரமனை முழுவதுமாக அறிந்து கொள்வதற்கு நான்கு தகுதிகள் தேவை. இந்த நான்கு தகுதிகளின் விளக்கம் பின்வருமாறு:

முதல் தகுதி: செயல்களின் நோக்கம்

நாம் எல்லொரும் எப்பொழுதும் ஏதாவது செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது இயல்பு. தினசரி உண்டு, உழைத்து, உறங்குவதும், வாழ்க்கையில் பிறந்து, வளர்ந்து, கற்று, மணம் புரிந்து, குழந்தைகளை பெற்று, வளர்த்து, மூப்படைந்து மரிப்பது வரை எல்லோரின் பொதுவான சரித்திரம். இந்த செயல்களில் நாம் ஏன் ஈடுபடுகின்றோம் என்று சுயசிந்தனையில் ஆழ்பவர்களைவிட செக்குமாட்டைப் போல் வாழ்க்கைச் சக்கரத்தில் உழலுபவர்களே அதிகம்.

ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்பவர்களுக்கு இந்த நூல் எவ்வித பயனையும் கொடுக்காது.

உயர் கல்வி கற்கும்/கற்ற துடிப்பான இளைஞர்களில் பெரும்பாலோர் தங்கள் வாழ்க்கையை மிகவும் கவனத்துடன் திட்டமிடுகிறார்கள். இவர்கள் குறிக்கோளின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவர்கள். தங்களின் எல்லா செயல்களின் நோக்கங்களும் வாழ்க்கையின் குறிக்கோளை அடைய உதவும் படிகட்டுக்கள் என்பது இவர்களுக்கு தெரியும்.

இப்படிபட்ட தெளிவுடன் செயலாற்றுபவர்கள், இந்த நூலை பயில தகுதி வாய்ந்தவர்கள்.

இரண்டாம் தகுதி: குறிக்கோளில் தெளிவு

வாழ்க்கையில் குறிக்கோள் என்றும் ஒரே மாதிரி மாறாமல் இருப்பது இல்லை. படிக்கும் காலங்களில் 'நல்ல வேலை' என்று இருந்த குறிக்கோள், 'நல்ல வாழ்க்கைத்துணை', 'உயர் பதவி', 'நல்ல குழந்தைகள்' என்று பரிணாம வளர்ச்சி பெற்று 'ஆரோக்கியமான முதுமை, நிம்மதியான மரணம்' வரை தொடர்ந்து மாறுகிறது. நாளைய குறிக்கோள் நேற்றைய குறிக்கோளைவிட மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் எல்லொருக்கும் குறிக்கோளை அடைந்த பிறகு வரும் இன்பம்/ நிம்மதி நிலைப்பதில்லை. ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டேயிருக்கிறது. அடுத்த குறிக்கொளை அடைந்தால் போதும், பின் வேறு எதுவும் வேண்டாம் என்ற எண்ணம் கானல் நீரைப்போல நம்மை எப்பொழுதும் இடைவிடாமல் செயல்களில் ஈடுபடச் செய்கிறது.

நம்முடைய அனைத்து குறிக்கோள்களையும் தங்கள் குறிக்கோளாகக்கொண்டு அவற்றை அடைந்தவர்கள் இவ்வுலகில் பல பேர். அவர்களில் யாரும், 'நான் வாழ்க்கையில் செய்யவேண்டியது அனைத்தையும் செய்துவிட்டேன், அடைய வேண்டியது அனைத்தையும் அடைந்துவிட்டேன், இனி எனக்கு குறிக்கோள் என்று ஏதும் இல்லை' என்று சொல்வதாகத் தெரியவில்லை.

வாழ்க்கை என்பது ஒரு இடைவிடாத முடிவில்லாத தேடலா? இந்த கேள்விக்கு சரியான விடை என்ன என்று அறிய வேண்டும் என்ற துடிப்பு யார் மனதில் தோன்றுகிறதோ அவர்கள் இந்த நூலை பயிலத்தகுதியானவர்கள். பெரும்பாலோர் குறிக்கோள் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. எனவே எப்பொழுதும் போல் தொடர்ந்து தேடலில் ஈடுபடுவதுதான் சரி என்ற முடிவுடன் இருப்பார்கள். இவர்கள் முதலில் தங்களுடைய உண்மையான குறிக்கோள் என்ன என்பதை ஆராய வேண்டும்.

ஒவ்வொருவருடைய தனிப்பட்ட குறிக்கோள்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டவை போன்று தோன்றினாலும், ஆழ்ந்து சிந்தித்தால், எல்லா மனிதர்களுக்கும் இருப்பது 'குறையாத மகிழ்ச்சி, நிரந்தரமான பாதுகாப்பு மற்றும் கலையாத நிம்மதி' என்ற ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே என்பது தெரிய வரும்.

வாழ்க்கையில் சுகதுக்கங்களும் ஏற்றத்தாழ்வுகளும் மாறி மாறி வந்தாலும், 'எப்பொழுதும் எந்தவித கவலையும் இல்லாமல் இன்பமாக இருக்க வேண்டும்' என்பதே அனைவரது அனைத்து குறிக்கோள்களின் சாராம்சம். எல்லா குறிக்கோள்களுடைய உண்மை நோக்கம் இது ஒன்றே என்பதை உணர்ந்து, எவர் 'என் ஒரே குறிக்கோள் இன்பம், இன்பம் மட்டுமே' என்ற முடிவிற்கு வருகிறார்களோ அவர்களே இந்த நூலை பயில தகுதி வாய்ந்தவர்கள்.

மூன்றாம் தகுதி: தவறான பாதையில் அனுபவம்

முடிவான குறிக்கோள் இன்பம் மட்டும்தான் என்பது புரிந்தாலும் அது படிப்படியாக அடைய வேண்டிய ஒன்று, வாழ்க்கையின் ஒவ்வொரு குறிக்கோளை அடையும்போதும் நாம் இந்த குறையாத இன்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறோம் என்ற தவறான முடிவுடன் பலர் இருக்கிறர்கள். நிம்மதியான வாழ்வை தேடி நிம்மதியற்று அலைவதுதான் வாழ்வு என்பது தவறு.

பட்டம், பதவி, பணம் மற்றும் புகழ் ஆகியவை நிச்சயமாக நம்மை குறையாத இன்பத்தை அனுபவிக்கும் நிலைக்கு அழைத்து செல்ல மாட்டா என்று பலருக்கு தெரிவதில்லை. தான் போகும் பாதை சரியானது என்பதில் உறுதியாக இருப்பவர்கள் யாரிடமும் வழி கேட்பதில்லை. தவறான பாதையில் சிறிது தூரம் அல்லது வெகு தூரம் பயணம் செய்த பிறகுதான், பாதை தவறாக இருக்கலாம் என்ற எண்ணம் வரும். அதற்கு பிறகே குறையாத இன்பத்தை அடையும் சரியான பாதையைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவல் ஏற்படும்.

'பொருளாதார முன்னேற்றம்' என்ற பாதையில் சில காலம் பயணித்த அனுபவத்திற்குப் பிறகு, இன்பத்தை தரும் சரியான வழியை தெரிந்து கொள்ளும் அடங்காத ஆவல் கொண்டவர்களே இந்த நூலை பயின்று பயன் பெறத் தகுதியானவர்கள்.

நான்காம் தகுதி: சீறிய பகுத்தறிவு

கவலை இல்லாத மனிதன் வெறும் கற்பனையல்ல என்பதை வேதங்களும் அவற்றை கற்றுத் தேர்ந்த ஆசிரியர்களும் கூறும் பொழுது இக்கூற்றின் உண்மையை அறிய தகுதி பெற்றவர்கள் கூரிய அறிவுள்ளவர்கள் மட்டுமே.

எதையும் ஆராய்ந்து அறியாமல், ஆட்டு மந்தையைப் போல் எல்லோரும் செல்லும் தவறான பாதையில் கடைசி வரை பயணிப்பவர்கள் இந்த நூலின் உயர்வை உணர மாட்டார்கள். மூட நம்பிக்கையுடனும், வாழ்கை என்பது எப்பொழுதும் ஒரு இன்ப துன்பங்களின் கலவையாகத்தான் இருக்கும் என்ற தன்னம்பிக்கையில்லா நினைப்புடனும் இருப்பவர்கள் இந்நூலை படிக்க தகுதியில்லாதவர்கள்.

'இறைவன் இருக்கின்றானா?' என்ற கேள்விக்கு உண்டு என்றோ இல்லை என்றோ புத்திக் கூர்மையை பயன்படுத்தாமல் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் உறுதியான முடிவோடு இருப்பவர்கள் இந்த நூலை ஆராய்ந்து மெய்ப்பொருளை அறியத் தகுதியற்றவர்கள். இந்த கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது என்று மட்டும் சொல்லாமல் யாருக்குமே பதில் தெரியாது என்ற அசைக்க முடியாத பிடிவாதம் உள்ளவர்களும் இந்த நூலை படிக்க தகுதி இல்லாதவர்கள்.

நான் ஒரு சீறிய மாணவன். இறைவனைப் பற்றி இது வரை நான் முறையாகப் படிக்காத காரணத்தால் எனக்கு இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை. ஆனாலும் என்னுடைய அறிவுத்திறனாலும், தர்க்கத்தின் துணையுடனும் திறந்த மனதுடன் ஆசிரியரின் விளக்கங்களை சீர்தூக்கிப்பார்த்து என்னால் உண்மையை அறிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இந்த நூலை பயில தகுந்தவர்கள்.

முடிவுரை :

இந்த நான்கு தகுதிகளுடைய மாணவர்களுக்கு திறமிக்க ஆசிரியரின் கருணை கிடைக்குமேயானால், இந்த பரமரகசியம் என்ற நூலை அவர் துணையுடன் கற்று தேர்ந்து இவ்வாழ்க்கையில் அவர்கள் குறைவில்லா இன்பம் அடைந்து கவலையில்லாத மனிதனாக வாழ்வது உறுதி.

பயிற்சிக்காக :

1. பரமனை அறிந்து குறையில்லா இன்பத்தை அடைய முயல்வோர்களுக்கு இருக்க வேண்டிய நான்கு தகுதிகள் யாவை?

2. இந்த நான்கு தகுதிகள் உடையவர்கள் அனைவரும் இந்த பரம ரகசியம் என்ற நூலை படித்து பரமனை அறிய முடியுமா?

சுயசிந்தனைக்காக :

1. பரமனை அறிந்த பின் நாம் செயல்களில் ஈடுபடுவது நின்றுவிடுமா?

2. வேதங்களில் உள்ள கருத்துக்கள் உண்மையிலேயே மனிதகுலத்தின் இன்பத்திற்கு வழிகோலுமென்றால் ஏன் அந்த கருத்துக்கள் பரவலாக எல்லோருக்கும் தெரியாமல் இருக்கின்றன?